ஒரிசாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த கலவரங்களால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள கந்தமால் மாவட்ட கிராம மக்கள், இன்னும் தங்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்று கருதுவதால், அடுத்த பொதுத் தேர்தல் வரை மத்தியப் படைகளின் பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும் என்று கிறித்தவ மதத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்கைச் சந்தித்த ஆர்ச்பிஷப் ராஃபெல் சீனாத் தலைமையிலான கிறித்தவ மதத் தலைவர்கள் குழுவினர், கந்தமால் கலவர வழக்குகள் நடக்கும் விரைவு நீதிமன்ற நீதிபதியானவர் கிறித்தவம், இந்து ஆகிய இரண்டு மதங்களையும் சாராத நடுநிலையான மற்றொரு மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மக்கள் இன்னும் பயத்தின் பிடியில்தான் உள்ளனர் என்று கூறியுள்ள அவர்கள், கந்தமாலில் வசித்து வந்த கிறித்தவர்கள் பயத்தினால் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, குஜராத், கர்நாடாக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று விட்டனர். 15,000 க்கும் மேற்பட்டவர்கள் புவனேஸ்வர் உள்ளிட்ட நகரங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், பயம் விலகி தங்களின் இருப்பிடங்களுக்குத் திரும்பும் கிறித்தவர்களைச் சில சக்திகள் வலுக்கட்டாயமாக இந்துவாக மதம் மாறச் செய்கின்றன. அவர்களின் நடவடிக்கை, வாழ்க்கை என அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது.
எனவே, அடுத்த பொதுத் தேர்தல் வரை மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பை நீட்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிறித்தவத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.