மாலேகான் குண்டு வெடிப்புகளில் மேலும் ஒரு ராணுவத்தினருக்குத் தொடர்பு உள்ளதாக வெளியான செய்தியை மறுத்துள்ள மராட்டியத் துணை முதல்வர் ஆர்.ஆர். பாட்டீல், ராணுவத்தினருக்குக் களங்கம் விளைவிக்கும் எந்தச் செயலையும் அனுமதிக்கப்பட முடியாது என்றார்.
மாலேகானில் 6 பேரைப் பலியாக்கிய செப்டம்பர் 29 குண்டு வெடிப்புகள் தொடர்பாக ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கலோனல் பி.எஸ். புரோஹித்தை பயங்கரவாதத் தடுப்புப் படையினர் கைது செய்துள்ள நிலையில், இன்னும் பல ராணுவத்தினரைப் பயங்கரவாதத் தடுப்புப் படையினர் விசாரிக்கக் கூடும் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து மராட்டியத் துணை முதல்வர் ஆர்.ஆர். பாட்டீலிடம் கேட்டதற்கு, "மாலேகான் குண்டு வெடிப்புகளில் வேறெந்த ராணுவத்தினருக்கும் தொடர்பிருக்க முடியாது. ஆயுதப் படைகளுக்கு மராட்டியம் பெருமளவிலான வீரர்களை அனுப்பியுள்ளது. ராணுவத்தில் எங்களின் பங்களிப்பை எண்ணி நாங்கள் பெருமையடைகிறோம்." என்றார்.
மேலும், ராணுவத்தினருக்குக் களங்கம் விளைவிக்கும் எந்தச் செயலையும் அனுமதிக்கப்பட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.