மகாராஷ்டிராவில் வாழும் பிற மாநில மக்கள் மீது ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர் நடத்திய தாக்குதல் எதிரொலியாக தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அம்மாநில அரசுக்கு தாக்கீது அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் வாழும் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து டெல்லியைச் சேர்ந்த வணிகர் சலேக் சாந்த் ஜெய்ன் தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தாக்கீது வழங்கியுள்ளது.
வடஇந்தியர்கள் மீதான தாக்குதலை தடுக்கத் தவறிய மாநில அரசுக்கு, அரசியல் சட்டம் 355ன் கீழ் அம்மாநில அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும், மகாராஷ்டிர நவநிர்மான் சேனாவின் இந்த தாக்குதலால், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் பங்கம் ஏற்படுகிறது என்றும் சலேக் சாந்த் தனது மனுவில் கூறியிருந்தார்.