காங்கிரஸ் கட்சியின் தேர்தல் டிக்கெட் பணத்திற்காக விற்கப்படுகிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலரும் முன்னாள் அமைச்சருமான மார்க்கரெட் ஆல்வா குற்றம்சாற்றியுள்ளார்.
இதுகுறித்து தலைநகர் டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த மே மாதம் கர்நாடகச் சட்டப் பேரவைத் தேர்தலின்போது எனது மகன் போட்டியிட டிக்கெட் கேட்டேன். அதேபோல முன்னாள் மத்திய அமைச்சர் ஜாபர் ஷெரீப் தனது பேரனுக்கு டிக்கெட் கேட்டார். ஆனால் அரசியல்வாதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் உறவினர்களுக்குத் தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுப்பதில்லை என்று கட்சியின் மேலிடம் முடிவு செய்திருப்பதாகக் கூறி மறுத்துவிட்டனர்.
ஆனால் தற்போது 5 மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தலைவர்களின் மகன்கள், பேரன், உறவினர்கள் என ஏராளமானோருக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த சில தலைவர்கள் தங்களின் எல்லா வாரிசுகளுக்கும் டிக்கெட் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் 10, சத்தீஷ்கரில் 5, ராஜஸ்தானில் 7, காஷ்மீரில் 1 என மொத்தம் 23 பேருக்கு இவவாறு முறைகேடாக டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு டிக்கெட் கொடுக்கப்பட மாட்டாது என்று காங்கிரஸ் மேலிடம் வகுத்த விதி என்ன ஆனது?
அந்த விதி எங்களுக்காக மட்டும் வகுக்கப்பட்டதா? எங்கள் குடும்பத்தினர் என்ன தேச விரோதிகளா? கடத்தல்காரர்களா? அல்லது பயங்கரவாதிகளா?
உண்மையில் எந்த விதியும் வகுக்கப்படவில்லை. கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலின் போது, பணம் கொடுத்தவர்களுக்கே டிக்கெட் கொடுக்கப்பட்டது.
தற்போது 5 மாநிலத் தேர்தலிலும் காங்கிரஸ் டிக்கெட்டுகள் பணத்துக்காக விற்பனை செய்யப்படுகின்றன. பணம் கொடுத்து சீட் வாங்கிச் செல்கிறார்கள். இதுபற்றி நான் ஆதாரப்பூர்வமாக சோனியாவுக்கு கடிதம் எழுதப்போகிறேன்.
இவ்வாறு மார்க்கரெட் ஆல்வா கூறினார்.