Publish Date: Fri, 07 Nov 2008 (16:46 IST)
Updated Date: Fri, 07 Nov 2008 (16:45 IST)
ஒரிசா மாநிலத்தில் மல்காங்கிரி மாவட்ட வனப் பகுதியில் பதுங்கியிருந்த, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 4 மாவோயிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பதுக்கி வைத்திருந்த பெருமளவிலான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று காவலர்கள் தெரிவித்தனர்.
மூன்று பெண்கள் உள்ளிட்ட இந்த 4 மாவோயிஸ்ட்டுகளும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மல்காங்கிரியில் சித்ரகொண்டா நீர்த் தேக்கத்தில் மோட்டார் படகு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலும், 17 காவலர்கள் பலியாவதற்குக் காரணமான கண்ணி வெடித் தாக்குதலிலும் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஜகல்குண்டா வனப் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளின் சந்திப்பு நடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து சிறப்பு அதிரடிக் காவல் படையினரும் மாநிலக் காவல் படையினரும் நடத்திய கூட்டுத் தேடுதல் வேட்டையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக மல்காங்கிரிக் காவல் துறைக் கண்காணிப்பாளர் எஸ்.கே.கஜ்பியே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குமாரி(32), அருணா(40), பத்மா(45), கிருஷ்ணா(22) ஆகிய இந்த 4 பேரின் மீதும் ஆந்திராவில் பல்வேறு காவல் நிலையங்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஒரிசாவில் 10 வழக்குகள் உள்ளன என்று தெரிவித்த காவலர்கள், கிருஷ்ணா என்பவர் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரின் மனைவியான பத்மாவின் மகனான இருக்கலாம் என்று கருதுவதாகக் கூறினர்.
கண்ணிவெடிகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட பெருமளவிலான ஆயுதங்கள், புத்தகங்கள், தெலுங்கு, இந்தி, ஒரியா மொழிகளில் அச்சிடப்பட்டுள்ள துண்டறிக்கைகள், வரைபடங்கள், ஐபோடுகள், செல்பேசிகள், ரூ.10,000 ரொக்கம் ஆகியவை மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Webdunia
Publish Date: Fri, 07 Nov 2008 (16:46 IST)
Updated Date: Fri, 07 Nov 2008 (16:45 IST)