மலேகான் குண்டு வெடிப்புகள் வழக்கில் பணியில் உள்ள ராணுவ அதிகாரிக்குத் தொடர்புள்ளது குறித்துக் கவலை தெரிவித்துள்ள மத்திய அரசு, இந்தச் சம்பவத்தின் முழு பரிமாணத்தையும் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
இவ்வழக்கில், லெப்டினன்ட் கலோனலுக்கு எதிராக மராட்டியக் காவல் துறையினரின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.
இதுகுறித்துப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தச் சம்பவம் (குண்டு வெடிப்புகளில் ராணுவ அதிகாரிக்குத் தொடர்பிருப்பது) நம் அனைவருக்கும் ஆழ்ந்த கவலையைத் தரக்கூடியதாகும். குண்டு வெடிப்புகளின் முழுப் பரிமாணத்தையும் கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மராட்டியக் காவல்துறையினரின் விசாரணை அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அந்த அறிக்கையின் அடிப்படையில் லெப்டினன்ட் கலோனல் மீது பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோல, சந்தேகத்திற்குரிய அதிகாரிகளின் மீது விசாரணை நடத்த, எந்தவிதத் தயக்கமும் இன்றி முழு ஒத்துழைப்பைத் தர ராணுவமும் பாதுகாப்பு அமைச்சகமும் தயாராக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.