மலேகான் குண்டு வெடிப்புகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு உள்ளோருக்கு ஆதரவாகச் சட்ட உதவி மையத்தைத் துவக்க இந்து ஆதரவு அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
"பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாகத் தவறாகக் கைது செய்யப்பட்டுள்ள இந்துக்கள் அனைவருக்கும் உதவி செய்ய நிதி திரட்டுவதற்காகப் புனேவில் உள்ள தனியார் வங்கி ஒன்றி கணக்குத் துவக்கப்பட்டுள்ளது" என்று அபினவ் பாரத், இந்து மகாசபை அமைப்புகளின் தலைவர்களில் ஒருவரான ஹிமானி சாவர்கர் தெரிவித்துள்ளார்.
மலேகான் குண்டு வெடிப்புச் சதியில் தனக்குத் தொடர்புள்ளதாக ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கலோனல் பிரசாத் புரோஹித் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்துக் கேட்டதற்கு, பயங்கரவாதத் தடுப்புப் படையினர் குற்றம்சாற்றப்பட்டுள்ளவர்களைத் துன்புறுத்தித் தங்களுக்குச் சாதகமான பதிலைப் பெறுகின்றனர் என்றார் அவர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாத்வி பிரக்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு நாசிக் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட போது அவருக்கு பகவத் கீதையின் பிரதி ஒன்றைத் தரத் தனக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்று கூறிய சாவர்கர், "இது காவல்துறை சீருடையில் உள்ள பயங்கரவாதம்" என்றார்.