நமது நாடு முழுவதும் கல்வியில் பின் தங்கியுள்ள பகுதிகளில் 6,000 மாதிரிப் பள்ளிகளை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 2,500 பள்ளிகள் மாநில அரசுகளின் மூலம் கல்வியில் பின்தங்கியுள்ள பகுதிகளில் அமைக்கப்படும்.
இந்தப் பள்ளிகளுக்கான நிலம் அந்தந்த மாநில அரசுகளால் இலவசமாக வழங்கப்படும். பள்ளிகளின் பயிற்று மொழி அந்தந்த மாநில அரசுகளால் முடிவு செய்யப்படும் என்றாலும், ஆங்கிலம் கற்பித்தல், ஆங்கிலம் பேசும் பயிற்சி ஆகியவற்றுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.
மத்தியத் திட்டக் குழுவானது 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் மாதிரிப் பள்ளித் திட்டத்திற்கு ரூ.12,750 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 2008- 09 நிதிநிலை அறிக்கையில் ரூ.650 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 2,500 பள்ளிகளை அமைப்பதற்குத் தேவையான நிதி ரூ.9,321 கோடி ஆகும். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.7,457 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ள மாதிரிப் பள்ளித் திட்டத்திற்கான நிதிப் பங்கீடு மத்திய, மாநில அரசுகளின் பங்கு 11ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 75:25 விழுக்காடு என்றும், 12 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 50:50 விழுக்காடு என்றும், சிறப்புப் பிரிவு மாநிலங்களுக்கு எல்லா காலங்களிலும் 90:10 விழுக்காடு என்றும் இருக்கும்.