தங்களுக்குப் பதிலளிக்காமல் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியைத் தமிழக அரசு தொடருமானால், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கர்நாடக அரசு முறையிடும் என்றும் அம்மாநில நீர்வளத் துறை அமைச்சர் பாசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
இதுகுறித்துப் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உலகளவில் ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியுள்ள தமிழக அரசின் நடவடிக்கை குறித்துக் கடும் அதிருப்தி தெரிவித்ததுடன், தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் ஆதாயத்திற்காகத் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் குற்றம்சாற்றினார்.
மேலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றும் தமிழக அரசின் முயற்சி குறித்து மத்திய நீர்வள அமைச்சகச் செயலரிடம் நேற்று கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட பொம்மை, "தமிழக அரசின் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான அடுத்தகட்ட முயற்சிகளைப் பற்றி ஆலோசிக்கும் முன்பு, கர்நாடக அரசின் அதிருப்திக்கு மத்திய அரசு அளிக்கும் பதிலிற்காகக் காத்திருப்போம்" என்றார்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு நிதியளிக்கவுள்ள அமைப்பாகக் கூறப்படும் சர்வதேச ஒத்துழைப்பிற்கான ஜப்பான் வங்கிக்குக் கர்நாடக அரசு கடிதம் எழுதி, நிதி உதவியை நிறுத்தும்படி கோரும் என்றும் அவர் கூறினார்.
"ஏற்கேனவே காவேரி பாசனப் பகுதியில் கர்நாடக அரசு மேற்கொண்ட திட்டத்திற்கு சர்வதேச ஒத்துழைப்பிற்கான ஜப்பான் வங்கியிடம் கர்நாடக அரசு நிதி கோரியதற்கு எதிராகத் தமிழக அரசு கடிதம் எழுதியதைப் போல, ஒகேனக்கல் திட்டத்திற்கு எதிராக கர்நாடக அரசு கடிதம் எழுதும்" என்றார் பொம்மை.