போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆஃப்கானிஸ்தானில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு உதவும் வகையில், அந்நாட்டுத் தலைநகர் காபூலில் நாடாளுமன்றக் கட்டடம், இந்திய அரசின் ஆவணக் காப்பகம் ஆகியவற்றைக் கட்டும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காபூலில் நாடாளுமன்றக் கட்டடம், இந்திய அரசின் ஆவணக் காப்பகம் ஆகியவற்றைக் கட்டும் கூட்டுத் திட்டத்திற்கு திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி ரூ.950 கோடி நிதி ஒதுக்க தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒபபுதல் அளிக்கப்பட்டது என்று பிரதமர் அலுவலக துணை அமைச்சர் பிரித்விராஜ் சவான் தெரிவித்தார்.
ஆவணக் காப்பகத்தின் கட்டுமானப் பணிகள் 16 மாதங்களிலும், நாடாளுமன்ற வளாகத்தின் கட்டுமானப் பணிகள் 36 மாதங்களிலும் முடிவடையும் என்றும், இந்தத் திட்டம் நிறைவேறினால் ஆஃப்கானிஸ்தானில் இந்தியாவின் புகழ் உயரும் என்றும் அவர் கூறினார்.