தேர்தலிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யும் வகையில் பேரணி நடத்தப் போவதாகப் பிரிவினைவாத அமைப்புகள் அறிவித்துள்ளதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்புப் படையினர் குறிக்கப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதாலும், சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்படுவதாலும் பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதைப் போல அமைதி நிலவுகிறது.
பிரிவினையின்போது 1947இல் ஜம்முவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்தும், ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலைக் கண்டித்தும் புகழ்பெற்ற ஜாமியா மசூதி நோக்கிப் பேரணி நடத்தப் போவதாக பிரிவினைவாத அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளதையடுத்து பல்வேறு தடை உத்தரவுகளை காவல்துறை பிறப்பித்துள்ளது.
ஸ்ரீநகரின் மையப்பகுதிக்குச் செல்லும் சாலைகள், ஜாமியா மசூதிக்குச் செல்லும் சாலைகள் ஆகியவற்றில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சாலைகளில் தவிர்க்கவியலாத காரணங்களால் பயணித்தாக வேண்டிய மக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டபோது ஊரடங்கு உத்தரவு எதுவும் அமல்படுத்தப்படவில்லை என்றும், சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் சுற்றுக்காவல் பணிகள் அதிகரிக்கப்பட்டு சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.