சமூக நல்லிணக்கத்தை அழிப்பதன் மூலம் நமது நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் மிகப் பெரிய சதி நடந்து வருகிறது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
மராட்டிய மாநிலம் மலேகானில் செப்டம்பர் 29ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்புகள் தொடர்பாக ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கலோனல் ஸ்ரீகந்த் புரோகித் என்பவரை பயங்கரவாதத் தடுப்புப் படையினர் இன்று கைது செய்தனர்.
இதுகுறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால், நமது புலனாய்வு அமைப்புகள் போதிய ஆதாரங்களைச் சேகரித்த பிறகுதான் எந்தவொரு நபரையும் கைது செய்யும் என்று குறிப்பிட்டார்.
"இதுபோன்ற ஒருவர் (லெப்டினன்ட் கலோனல்) பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருப்பது ஆழ்ந்த கவலை தரும் விடயம் ஆகும். சமூக நல்லிணக்கத்தை அழிப்பதன் மூலம் நமது நாட்டையே சீர்குலைக்கும் மிகப் பெரிய சதி நடந்து வருகிறது. ஆனால், நமது புலனாய்வு அமைப்புகள் அதை முறியடித்து, சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்கின்றனர்." என்று ஜெய்ஸ்வால் கூறினார்.
பஜ்ரங் தளம் அமைப்பிற்குத் தடை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறதா என்று கேட்டதற்கு, பல்வேறு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடியவில்லை என்றும், அவை முடிந்த பின்புதான் மேற்கொண்டு யோசிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, மலேகானில் பிடிபட்ட ஸ்ரீகந்த் புரோகித்திடம் இரண்டு நாட்களாகத் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.