சண்டை நிறுத்த மீறல்கள், எல்லை தாண்டிய ஊடுருவல் முயற்சிகள், இந்திய- பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்தியப் படையினரின் நிலைகளின் மீது எறிகணைகள் வீச்சு ஆகியவை தொடர்பாக, பாகிஸ்தான் படையினரிடம் நமது எல்லைப் பாதுகாப்புப் படையினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு மண்டலத்தில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நடந்த மாதச் சந்திப்புக் கூட்டத்தில் இந்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு மாவட்டத்தில் மக்வால் பகுதியில் சர்வதேச எல்லைக் கோட்டில் நேற்று எல்லைப் பாதுகாப்புப் படையினரின் துர்கா, நாகா 11 ஆகிய கண்காணிப்பு மையங்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும் எறிகணைகளை வீசியும், ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் மேற்கொண்ட இந்திய எல்லைக்குள் ஊடுருவும் முயற்சிகளுக்கு பாகிஸ்தான் படையினர் உதவினர்.
இந்தத் தாக்குதலில் நமது எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் சோட்டா சாக் மையத்தில் இருந்து வீசப்பட்டுள்ள எறிகணைகள் இந்திய எல்லைக்குள் 350 மீட்டர் தொலைவிற்கு வந்து விழுந்துள்ளன. தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளுக்கு உதவும் பாகிஸ்தான் படையினரின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்று எல்லைப் பாதுகாப்புப் படை கூடுதல் கமாண்டர் எஸ் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
லாகூரில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி நடந்த இரண்டு நாள் பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகள் சந்திப்பின்போது, சண்டை நிறுத்த மீறலைக் கைவிடுவதாக இந்தியாவிற்குப் பாகிஸ்தான் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இது நடந்து மூன்று வாரங்கள் கூட முடியாத நிலையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறித் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் பாகிஸ்தான் படையினர் நடத்தியுள்ள 36ஆவது அத்துமீறிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.