அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரக் ஒபாமா பெற்றுள்ள வெற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மேற்கு மற்றும் தெற்கு ஆசியா மீதான அமெரிக்கக் கொள்கைகளில் அவர் மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
"ஒபாமா மாற்றத்திற்காக வாக்குச் சேகரித்தார். மக்களுக்கும் மாற்றத்திற்காக அவருக்கு வாக்களித்துள்ளனர். வளர்ந்து வரும் நாடுகளின் மீதான; குறிப்பாக மேற்கு மற்றும் தெற்கு ஆசியா மீதான அமெரிக்கக் கொள்கைகளில் அவர் உண்மையிலேயே மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறியுள்ளார்.
ஜார்ஜ் புஷ் நிர்வாகம் வளர்ந்து வரும் நாடுகளைப் போர்க் கண்ணோட்டத்துடனே பார்த்து வந்தது என்று குறிப்பிட்ட அவர், புதிய அதிபர் புஷ்ஷின் கொள்கைகளைக் கைவிட்டுவிட்டு அமைதி மற்றும் வளர்ச்சி நோக்கிய புதிய கொள்கைகளை தேர்ந்தேடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.