Publish Date: Tue, 04 Nov 2008 (15:19 IST)
Updated Date: Tue, 04 Nov 2008 (15:19 IST)
ஜம்மு- காஷ்மீரில் சர்வதேச எல்லைக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய எறிகணை வீச்சு, குண்டுவீச்சுத் தாக்குதல்களில் நமது எல்லைப் பாதுகாப்புப் படையினர் இருவர் காயமடைந்துள்ளனர்.
எல்லை தாண்டிய தாக்குதலை நிறுத்துவோம் என்று பாகிஸ்தான் உறுதியளித்து மூன்று வாரங்களுக்குள் இந்த அத்துமீறல் நடந்துள்ளது.
ஜம்மு மாவட்டத்தில் மக்வால் வட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கோட்டுப் பகுதியில் கண்காணிப்புப் பணிக்காக அமைக்கப்பட்டிருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் நிலைகளின் மீது சிறிய வகை எறிகணைகள், குண்டுகளைக் கொண்டு பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் 141 பட்டாலியனைச் சேர்ந்த இரண்டு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் இருவரும் ஜம்மு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியத் தரப்பில் இருந்து எதிர்த் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.
கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி லாகூரில் நடந்த இரண்டுநாள் சந்திப்பில் எல்லை தாண்டிய தாக்குதல் நிறுத்தப்படும் என்று பாகிஸ்தான் லெப்டினன்ட் ஜெனரல் முகமது யாகூப் கான் நமது எல்லைப் பாதுகாப்புப் படை கூடுதல் தலைமை ஆய்வாளர் யு.கே.பன்சாலிடம் உறுதியளித்தார்.
இது நடந்து மூன்று வாரங்கள் கூட முடியாத நிலையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறித் தாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.