ஈரானுடன் நல்லுறவைத் தொடரக் கூடாது என்று மத்திய அரசை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவதால்தான் ஈரான்- பாகிஸ்தான்- இந்தியா எரிவாயுக் குழாய்த் திட்டம் நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) குற்றம்சாற்றியுள்ளது.
தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரியிடம் எரிவாயுக் குழாய்த் திட்டம் குறித்துக் கேட்டதற்கு, "எரிவாயுக் குழாய்த் திட்டம் நிறைவேறுவதில் ஏராளமான தாமதம் ஏற்பட்டு வருகிறது. அணு சக்தி ஒப்பந்தத்தில் மத்திய ஐ.மு.கூட்டணி அரசு கையெழுத்திட்டது முதல் அமெரிக்கா கொடுத்துவரும் நெருக்கடிதான் இதற்குக் காரணம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்" என்றார்.
மேலும், அமெரிக்காவின் அழுத்தத்தை நிராகரித்து எரிவாயுக் குழாய்த் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.