மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆகியோரைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள கண்ணிவெடித் தாக்குதல் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள பாரோ என்ற இடத்தில் நேற்று நடத்தப்பட்ட இந்தச் சக்திவாய்ந்த தாக்குதலில் 6 காவலர்கள் படுகாயமடைந்ததுடன், அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் பாதுகாப்பு வாகனம் ஒன்று சேதமடைந்தது.
சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள பாடுடலா உள்ளிட்ட சில கிராமங்களில் நேற்றிரவு முழுவதும் நடந்த தீவிரத் தேடுதல் வேட்டையில் 8 பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், மேற்க மண்டல ஐ.ஜி. குல்தீப் சிங் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்தில் தங்கி விசாரணை நடத்தி வருவதாகவும் சட்டம்- ஒழுங்கு ஐ.ஜி.பி. ராஜ் கனோஜா கூறியதாக பி.டி.ஐ. செய்தி தெரிவிக்கிறது.
கண்ணிவெடி வெடித்த இடத்தில் உருவாகியுள்ள 5 அடி ஆழப் பள்ளத்தை ஆய்வு செய்துள்ள தடவியல் அறிஞர்கள், வெடிபொருள் சிதறல்களைச் சேகரித்துச் சென்றுள்ளனர்.
தாக்குதலிற்குப் பயன்படுத்தப்பட்டது ஐ.இ.டி. வெடிகுண்டாக இருக்கலாம் என்று முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.