மராட்டிய மாநிலம் மலேகானில் செப்டம்பர் 29இல் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நாசிக் நகரத்தில் உள்ள போன்சலா ராணுவப் பள்ளியின் கமாண்டரான லெப்டினன்ட் கலோனல் (ஓய்வு) சைலேஷ் ராய்கார் என்பவரை மராட்டிய பயங்கரவாதத் தடுப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
மலேகானில் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு முன்பாக போன்சலா ராணுவப் பள்ளியில் நடந்த கூட்டத்தில் சைலேஷ் ராய்காரும் பங்கேற்றுள்ளார் என்ற குற்றச்சாற்று குறித்து விசாரிப்பதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான பிரக்யா சிங் தாகூர், சமீர் குல்கர்னி, ரமேஷ் உபத்யாய ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதற்கிடையில் போன்சலா ராணுவப் பள்ளியின் எழுத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவை தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புப் படையினர் அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.