அஸ்ஸாமில் 77 பேரைப் பலிகொண்ட தொடர் குண்டு வெடிப்புகளுக்கு இஸ்லாமிய பாதுகாப்புப் படை (ஐ.எஸ்.எஃப்) - இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இத்தகைய தாக்குதல்கள் தொடரும் என்றும் அவ்வமைப்பு எச்சரித்துள்ளது.
அஸ்ஸாமில் நடந்துள்ள தொடர் குண்டு வெடிப்புகளுக்குத் தாங்கள் காரணமில்லை என்று உல்ஃபா அமைப்பு திட்டவட்டமாக மறுத்திருந்த நிலையில், ஜிகாதி அமைப்புகளின் மீது சந்தேகம் வலுத்துள்ளதாகக் காவல்துறை செய்திகள் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் இன்று நியூஸ் லைவ் என்ற உள்ளூர்த் தொலைக்காட்சிக்கு வந்துள்ள எஸ்.எம்.எஸ். செய்தியில், நேற்று நடந்துள்ள தொடர் குண்டு வெடிப்புகளுக்கு ஐ.எஸ்.எஃப் - இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பொறுப்பெற்றுள்ளதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற தொடர் குண்டு வெடிப்புகளை அடுத்தடுத்து நடப்போவதாகவும் எச்சரித்துள்ளது.
மேலும், "இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள எங்களின் எல்லா உறுப்பினர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
நியூஸ் லைவ் சேனலின் செய்திப் பிரிவில் உள்ள 98646- 93690 என்ற ரிலையன்ஸ் இணைப்பு எண்ணிற்கு இந்த எஸ்.எம்.எஸ். வந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் காவலர்கள், மத்திய அஸ்ஸாமில் நாகான் மாவட்டத்தில் உள்ள மொய்ராபாரி என்ற இடத்தில் நசீர் அகமது என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணில் இருந்து எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்துள்ளதுடன், அவரைத் தேடி வருகின்றனர்.