நமது நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு தூய்மையான குடிநீர் தருவதற்காக 1,00,000 குடிநீர்ச் சுத்திகரிப்புக் கருவிகள் அமைக்கும் திட்டத்திற்கு இந்த நிதியாண்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்று மாலை நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து இன்று செய்தியாளர்களிடம் விளக்கிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், 2008- 09 நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு தூய்மையான குடிநீர் தரும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதியன்று துவங்கப்படவுள்ள ரூ.200 கோடி மதிப்பிலான இத் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 1,00,000 குடிநீர் சுத்திகரிப்புக் கருவிகள் அமைக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் இந்தத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் நிர்வாகக் கட்டமைப்புகளை அதிகரிக்க வழிவகுக்கும் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவும், இரயில்வே தீர்ப்பாயச் சட்டம் மற்றும் இரயில்வே சொத்துக்களைச் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதைத் தடுக்கும் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.