அஸ்ஸாம் தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள மத்திய அமைச்சரவை, அது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை வலியுறுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்று மாலை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அஸ்ஸாம் தொடர் குண்டுவெடிப்புகள் குறித்தும், அது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதுபற்றி இன்று காலை, அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் குறித்துச் செய்தியாளர்களிடம் விளக்கிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அஸ்ஸாம் தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து அமைச்சரவையில் ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டதாகவும், அது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை அமைச்சரவை கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்டோர் குடும்பத்தினருக்கு அமைச்சரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், அஸ்ஸாம் தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பாக தேசிய பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி) இன்று விசாணையைத் துவக்கியுள்ளது. சம்பவ இடங்களில் தடயவியல் நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய தடயங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அஸ்ஸாம் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப் படையும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
அஸ்ஸாம் தாக்குதலில் தங்களுக்கு தொடர்பில்லை என்று உல்ஃபா அமைப்பினர் திட்டவட்டமாக மறுத்துள்ளதைத் தொடர்ந்து, ஜிஹாதி அமைப்புகளின் மீது சந்தேகம் வலுத்துள்ளது.
இந்நிலையில், குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் இன்று பார்வையிட உள்ளனர்.