அஸ்ஸாமில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்த விசாரணையை தேசிய பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி) இன்று துவக்கியுள்ளது.
குண்டுவெடிப்பு நடந்த இடங்களில் இன்று காலை என்.எஸ்.ஜி தடயவியல் நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய தடயங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து என்.எஸ்.ஜி அதிகாரிகள் செய்தியாளர்களிடம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
எனினும், குவஹாத்தியில் நேற்று நடத்தப்பட்ட 5 குண்டுவெடிப்புகளும், கார் குண்டுகளை பயன்படுத்தி நடத்தப்பட்டதாக அஸ்ஸாம் காவல்துறை உயரதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், புதுடெல்லியில் இருந்து குவஹாத்தி வந்த பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, குண்டுவெடிப்பு நடந்த சி.ஜே.எம். நீதிமன்றம், எம்.எம்.சி. மருத்துவமனை ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டார்.
தொடர் குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க அஸ்ஸாம் அரசின் சார்பில் சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மத்திய அரசின் சார்பில் அனுப்பப்பட்ட ஆய்வுக்குழு 2 பிரிவாக சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், இச்சதியில் ஜிஹாதி பயங்கரவாத அமைப்புக்கு தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தியுள்ளது.
அஸ்ஸாம் தாக்குதலில் தங்களுக்கு தொடர்புள்ளதாக கூறப்பட்ட முதற்கட்ட குற்றச்சாட்டை உல்ஃபா அமைப்பினர் திட்டவட்டமாக மறுத்ததைத் தொடர்ந்து, இத்தாக்குதலில் ஜிஹாதி அமைப்புக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இந்நிலையில், குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் இன்று பார்வையிட உள்ளனர்.