அசாம் மாநிலத்தில் நேற்று தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பார்வையிட உள்ளனர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து இக்குழுவினர் நேரில் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தேசிய பாதுகாப்புப் படையினர் கொண்ட குழுவும் அசாம் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக உள்துறை செயலாளர் மதுக்கர் குப்தா தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துப் பொருட்கள் குறித்து கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாகவும், அதன்பின்னரே எந்தவகை வெடிப்பொருட்கள் உபயோகித்துள்ளனர் என்பது தெரிய வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ள போதிலும், கூடுதலாக துணை ராணுவப் படையினர் அசாம் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குப்தா தெரிவித்தார்.
குண்டுவெடிப்பில் எந்த அமைப்பிற்குத் தொடர்பு என்பதை இப்போது உறுதிப்படுத்த இயலாது என்றும் அவர் கூறினார். தொடர் குண்டுவெடிப்பு பற்றி மாநில அரசிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.