அசாம் மாநிலத்தில் நேற்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நேற்றைய குண்டுவெடிப்பில் பலத்த காயம் அடைந்துள்ளவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிதி பிரதமர் நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்றைய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் கவுகாத்தியில் கணேஷ்பூர் மேம்பாலத்திற்கு அருகே நேற்று முற்பகல் பதினொன்றரை மணியளவில் முதல் குண்டு வெடித்தது.
தொடர்ந்து பால்டன் பஜார், பேன்ஸி பஜார் ஆகிய இடங்களில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
கோக்ரஜார், பொங்கைகான், பார்பேடா உள்பட 13 இடங்களில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் இதுவரை 70 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கவுகாத்தியில் மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். குண்டுவெடிப்பால் ஏற்பட்ட இடிபாடுகளில் மீட்புப் பணிகள் நடைபெறுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.