அஸ்ஸாமில் குவஹாட்டி உட்பட 4 முக்கிய இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
அம்மாநிலத்தின் முக்கிய நகரான குவஹாட்டியிலும், கோக்ரஜ்ஹார், போன்கைகன், பர்பேட்டா சாலை ஆகிய பகுதிகளிலும் இன்று மதியம் 11.30 மணியளவில் அடுத்தடுத்து 11 குண்டுகள் வெடித்தன.
இதில் குவஹாட்டியில் மட்டும் 4 இடங்களில் குண்டு வெடித்துள்ளது. இதேபோல் கோக்ராஜ்ஹரில் 3 இடங்களிலும், போன்கைகன், பர்பேட்டா சாலையில் தலா 2 இடங்களிலும் அடுத்தடுத்து குண்டு வெடித்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோக்ராஜ்ஹர் செயல்பட்டு வரும் முக்கிய சந்தையில் 2 குண்டுகளும், ரயில் தண்டவாளப் பகுதியில் ஒரு வெடிகுண்டும் வெடித்தாகவும், இதில் மட்டும் சுமார் 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கணேஷ்குரி பகுதியில் வெடித்த குண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், இப்பகுதியில் மட்டும் 50 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில காவல்துறை டி.ஐ.ஜி. சிங், இத்தாக்குதலுக்கு உல்ஃபா பயங்கரவாதிகள் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தார்.
தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து குவஹாட்டி நகருக்கு செல்லும் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் தருண் கோகாய் குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.