இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழை காரணமாக மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர் ரின்போசே, மீட்புப் பணிகள் துவங்கிய பின்னர் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவித்தார்.
இதுவரை பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்ததாகவும், மழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் வீடுகள் சரிந்ததே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
சீனாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காமெங் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அதிகளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்வதால் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் பணிகளும் தாமதமாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டதால் சீன எல்லைப் பகுதியில் காவல் பணிக்கு செல்லும் ராணுவ வீரர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.