மும்பையில் உள்ளூர் ரயிலில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சிலர் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
மும்பையில் வட இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சிவராஜ் பாட்டீல் அப்போது, முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.
பீகாரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மும்பையில் இரு தினங்களுக்கு முன்பு பேருந்தைக் கடத்த முயன்ற போது, காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். புறநகர் ரயிலில் ஏற்பட்ட தகராறில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சிலர் நேற்று அடித்து தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதனால் மும்பையில் பதற்றம் ஏற்பட்டது.
மகாராஷ்டிர அரசு கூடுதல் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே ரயிலில் இருக்கை தொடர்பாக ஏற்பட்ட மோதலிலேயே உ.பி. இளைஞர் தாக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக மத்திய அரசுக்கு மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்கள் கோரப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.