அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவில் இந்தியா பெரிய அளவிற்கு பாதிக்கப்படாமல் தப்பியதற்கு ஆட்சிக்கு ஆதரவளித்துவந்த தங்களின் எதிர்ப்பே காரணம் என்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பர்தன் கூறியுள்ளார்.
ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநில நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏ.பி.பர்தன், வங்கிகளையும், காப்பீடு நிறுவனங்களையும் தனியார் மயமாக்க முயற்சித்த மத்திய அரசின் நடவடிக்கைகளையும், அன்னிய நேரடி முதலீட்டிற்குத் தாங்கள் தெரிவித்த எதிர்ப்பின் காரணமாகவே, நமது நாட்டு வங்கிகள் சர்வதேச அளவில் ஏற்பட்ட இன்றைய பொருளாதாரச் சிக்கலில் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகாமல் தப்பித்தன என்று கூறினார்.
ஏற்கனவே விலை ஏற்றத்தாலும், பணவீக்கத்தாலும் பெரும் சிக்கலைச் சந்தித்துவரும் நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு நிதிச் சரிவும் கூடுதல் சுமையாகியுள்ளது என்று கூறிய பர்தன், இராணுவ, பொருளாதார பலத்தைப் பயன்படுத்தி தனது ஏகாதிபத்தியத்தை இந்தியாவின் மீதும் திணிக்க முயன்ற அமெரிக்காவின் முயற்சியை தாங்கள் தடுத்துவிட்டதாகக் கூறினார்.