மும்பையில் துப்பாக்கி முனையில் பேருந்தை கடத்த முயன்ற பீகார் வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மும்பையில் இன்று காலை அந்தேரியிலிருந்து குர்லா பகுதிக்கு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது, பேருந்தில் பயணிகளுடன் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் திடீரென எழுந்து ஓட்டுனர் அருகே சென்றார்.
பேருந்தை வேறு இடத்துக்கு கொண்டு செல்லும்படி துப்பாக்கி முனையில் ஓட்டுனரை மிரட்டினார். இதனால் டிரைவருக்கும், அந்த இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
அப்போது, பேருந்தில் இருந்த பயணி ஒருவர், தனது செல்பேசியில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, காவல்துறையினர் விரைந்து வந்து அந்த பேருந்தை மடக்கினர்.
அப்போது, அந்த இளைஞர் காவலர்களை சுட்டுவிட்டு தப்ப முயன்றார். காவல்துறையினர் திருப்பிச் சுட்டதில் குண்டுபாய்ந்து அந்த இளைஞர் பலியானார். இந்த சம்பவத்தில் நடத்துனர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பேருந்தை கடத்த முயன்ற இளைஞர் பீகாரை சேர்ந்தவர் என்பவர் தெரியவந்தது.
மும்பையில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியினர் வடமாநிலத்தவருக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் பீகார் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவங்களினால், அக்கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரேவுக்கு பாடம் கற்பிக்கும் வகையில், இந்த பஸ் கடத்தல் முயற்சியை அந்த இளைஞர் மேற்கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.