நிலவை ஆய்வு செய்ய இந்தியாவின் துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-1 விண்கலம், இன்று காலை மேலும் 90,000 கி.மீ. தூரத்திற்கு நிலவை நோக்கி நகர்த்தப்பட்டது.
புவியில் இருந்து 74,000 கி.மீ. தூரத்திற்கு நேற்று நகர்த்தப்பட்ட சந்திரயான் விண்கலத்தை இன்று காலை 07.08 மணி முதல் 9.30 நொடிகள் இயக்கி புவியில் இருந்து அதன் தொலைத்தூர சுழற்சிப்பாதையை (பெரிஜி) 1,64,000 கி.மீ. தூரத்திற்குத் தள்ளினர்.
சந்திரயானில் உள்ள நியூட்டன் 440 திரவ உந்து இயந்திரத்தைப் பயன்படுத்தி இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் இதனை சாதித்தது. பெங்களூருவிற்கு அருகேயுள்ள பயலாலுவில் அமைந்துள்ள விண்வெளி கோள் கண்காணிப்பு மையத்திலுள்ள ஆண்டனாவின் உதவியுடன் சந்திரயான்-1 சுழற்சிப்பாதை அதிகரிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தற்பொழுது, புவியிலிருந்து 348 கி.மீ. நெருங்கிய தூரமும் (அபோஜி), 1,64,600 கி.மீ. தொலைத்தூரமும் (பெரிஜி) கொண்ட சுழற்சிப்பாதையில் சந்திரயான் சுற்றி வருகிறது. இந்த நீள்வட்டப்பாதையில் ஒருமுறை புவியைச் சுற்றிவர அதற்கு 73 மணி நேரம் ஆகும்.
நிலவை நெருங்க இன்னமும் 2,20,000 கி.மீ. தூரத்திற்கு சந்திரயான்-1 பயணிக்க வேண்டும். இன்னமும் புவியை மையமாகக் கொண்ட சுழற்சிப் பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் சந்திரயான், நிலவின் சுழற்சிப் பாதைக்கு கொண்டு செல்லப்படவேண்டும்.
அந்த முயற்சி ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நடைபெறும்.