இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க இராணுவம் நடத்திவரும் தாக்குதலை உடனடியாக நிறுத்தி போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்றும், இராணுவத் தாக்குதலில் எந்த அளவிற்கு தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிய அனைத்துக் கட்சிக் குழுவை அந்நாட்டிற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக முதலமைச்சர் கருணாநிதி மத்திய அரசிற்கு விடுத்துள்ள முக்கியமான சில கோரிக்கைகளுடன் மத்திய கப்பல் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு நேற்று இரவு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்துப் பேசினார்.
தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இரண்டு வாரங்களில் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்றும், அது நடைபெறாவிட்டால் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது உறுப்பினர் பதவிகளைத் துறப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அந்தக் கெடு முடிவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இலங்கையில் இராணுவ தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி போர் நிறுத்தம் அறிவிக்கச் செய்ய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புவிற்கு அனுப்புமாறு சோனியா காந்தியிடம் டி.ஆர். பாலு கேட்டுக்கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவும், மருந்துப் பொருட்களும் தொடர்ந்து தடையின்றி சென்று சேர வழியேற்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தியதாக டெல்லிச் செய்திகள் கூறுகின்றன.
சிறிலங்க இராணுவத்திற்கு அளித்துவரும் உதவிகள் நிறுத்தப்படவேண்டும் என்றும், இராணுவத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலையை நேரில் கண்டுவர அனைத்துக் கட்சிக் குழு ஒன்றை அங்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் அமைச்சர் பாலு வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சாவின் தூதராக அவருடைய சகோதரர் ஃபசில் ராஜபக்ச தலைமையிலான குழு டெல்லி வந்துள்ள நிலையில், தி.மு.க. மத்திய அரசிற்கு போர் நிறுத்தம் செய்ய அழுத்தம் கொடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதற்கிடையே, இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலர் டி. இராசா, சிறிலங்க இராணுவத்திற்கு ஆயுத உதவி செய்யப்படுவது குறித்து பல்வேறு கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இதுவரை தெளிவான பதிலை அளிக்கவில்லை என்று குற்றம்சாற்றியுள்ளார்.
கச்சத்தீவை மீட்டு தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவது குறித்தும், தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்கடையினரால் தாக்கப்படுவது குறித்தும் கூட பிரணாப் முகர்ஜி நேரடியான பதிலேதும் அளிக்காமல் தவிர்த்து வருவதாக இராசா குற்றம் சாற்றியுள்ளார்.