நிலவை ஆய்வு செய்ய இந்தியா விண்ணில் செலுத்திய சந்திரயான்-1 விண்கலத்தின் சுழற்சிப்பாதை 75,000 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த 22ஆம் தேதி புதன் கிழமை காலை துருவ செயற்கைகோள் செலுத்து வாகனத்தின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-1 விண்கலத்தின் சுழற்சிப்பாதை வியாழக்கிழமை 37,000 (பெரிஜி) அதிகரிக்கப்பட்டது.
அதன்பிறகு, இன்று காலை 5.48 மணிக்கு, சந்திரயானில் உள்ள 440 நியூட்டன் திரவ உந்து இயந்திரம் இரண்டாவது முறையாக 16 நிமிடங்களுக்கு இயக்கப்பட்டு, அதன் நீள்வட்ட சுழற்சிப்பாதையின் தொலைத்தூரம் (பெரிஜி) 74,715 கி.மீட்டருக்கும், புவிக்கு நெருக்கமான நெருங்கிய தொலைத்தூரம் (அபோஜி) 336 கி.மீட்டருக்கும் நிலை நிறுத்தப்பட்டது.
இன்றைய இயக்கத்தின் மூலம் நிலவை நோக்கிய அதன் பயணம் 20 விழுக்காடு தூரத்தை கடந்துவிட்டது என்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) பேச்சாளர் எஸ்.சத்தீஸ் கூறியுள்ளார்.
இன்றைக்கு செய்யப்பட்ட சுழற்சிப்பாதை அதிகரிப்பு சாதனை நடவடிக்கையாகும் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார். இந்தியா அனுப்பிய செயற்கைக்கோள்கள் அனைத்தும் அதிகபட்சமாக புவியில் இருந்து 36,000 கி.மீ. தூரத்தில்தான் நிலை நிறுத்தப்பட்டன. இன்று அதையுன் கடந்து இரட்டிப்பு தூரத்திலிருந்து சந்திரயான்-1 புவியை வலம் வந்துக்கொண்டிருக்கிறது என்பது பெரும் சாதனை என்று மாதவன் நாயர் குறிப்பிட்டுள்ளார்.
“பூமிக்கு அருகில், அதன் புவி ஈர்ப்பு சக்திக்கு உட்பட்ட சுற்றிவரும்போது அதனை இயக்குவது சுலபமாகும். ஆனால், புவியின் ஈர்ப்புச் சக்தி குறைவதாலும், நிலவு, சூரியன் ஆகியன மட்டுமின்றி மற்ற கோள்களின் ஈர்ப்பும் உள்ளதால், சுழற்சிப்பாதை அதிகரிப்புப் பணி மிகச் சிக்கலானது” என்று மாதவன் நாயர் கூறினார்.
புவியில் இருந்து நிலவு 3,84,000 கி.மீ. தூரத்திலுள்ளது. அதனை நெருங்கி, நிலவிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் சந்திரயானை நிறுத்தி ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.