தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.
சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற ஏழாவது ஆசிய ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதில் 40 நாடுகளின் தலைவரகள் கலந்து கொண்டனர்.
தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பு தேவை. அமைதி இல்லாமல் தொடர் வளர்ச்சி சாத்தியமில்லை என்று பிரதமர் அப்போது குறிப்பிட்டார்.
உலகின் அமைதிக்கு அச்சுறுத்தலாகத் திகழும் தீவிரவாதத்தை ஒடுக்க உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட மன்மோகன சிங், தீவிரவாதத்தை பரப்புபவர்களையும், தீவிரவாதச் செயல்களுக்கு நிதி உதவி அளிப்பவர்களையும் ஒடுக்க வேண்டும் என்றார்.
உலகிலேயே அதிக ஏழைகள் வசிக்கும் பகுதி ஆசியா என சுட்டிக்காட்டிய பிரதமர், வறுமையை ஒழிக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உலக நாடுகளிடையே ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் அவசியம் என்று அவர் கூறினார்.
முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.