Publish Date: Fri, 24 Oct 2008 (23:56 IST)
Updated Date: Fri, 24 Oct 2008 (23:55 IST)
நாட்டில் 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், டிசம்பர் 10ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் ஒத்திவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதைக் கண்டறிய, கடந்த ஜூலை 21ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்புடன் நிறைவடைந்த நாடாளுமன்றக் கூட்டம், மீண்டும் கடந்த 17ஆம் தேதி கூடியது.
இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர், டெல்லி, மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய 6 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், நாடாளுமன்றத்தை கூட்டத்தொடரை ஒத்திவைப்பதுடன், முழுமையான குளிர்காலக் கூட்டத் தொடரை வரும் டிசம்பரில் கூட்ட வேண்டும் என பா.ஜ.க.வும், இடதுசாரிக் கட்சிகளும் வலியுறுத்தின.
இதைத் தொடர்ந்து இன்று மாலை தள்ளிவைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் டிசம்பர் 10ஆம் தேதி மீண்டும் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, நாடாளுமன்றக் கூட்டம் அடுத்த மாதம் (நவம்பர்) 21ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலைத் தொடர்ந்து டிசம்பர் 10 வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Webdunia
Publish Date: Fri, 24 Oct 2008 (23:56 IST)
Updated Date: Fri, 24 Oct 2008 (23:55 IST)