மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ்தாக்ரேக்கு எதிராக பீகார் நீதிமன்றத்தில் இன்று கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடந்த ரயில்வேத் துறைத் தேர்வின் போது மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தொண்டர்கள் தேர்வு மையங்களுக்குள் அத்துமீறி நுழைந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் தேர்வு எழுத வந்திருந்த பீகார் மாநிலம் நாலந்தாவில் உள்ள பாரா-குர்த் கிராமத்தைச் சேர்ந்த ஜகதீஷ் பிரசாத் என்ற ஏழை விவசாயியின் மகன் பவன்குமார் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது உடல் பீகாருக்கு கொண்டுவரப்பட்டு கடந்த செவ்வாய் கிழமையன்று இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.
பவன் குமாரின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.1,50,000 வழங்குவதாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக பவன் குமாரின் தந்தை ஜகதீஷ் பிரசாத் பிஹர்ஷரீப், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இ.பி.கோ. 302 சட்டத்தின் கீழ் ராஜ்தாக்கரேக்கு எதிராக கொலை வழக்குப் பதிவு செய்துள்ளார்.
இந்த வழக்கில், தன் மகன் கொலைத் தொடர்பாக ராஜ்தாக்கரே மற்றும் எம்.என்.எஸ். தொண்டர்கள் மீது அவர் குற்றம் சுமத்தியுள்ளதோடு ராஜ்தாக்ரேயை முக்கிய குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.