இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி விட்டதாகக் கூறி, இடதுசாரிக் கட்சிகள் பிரதமருக்கு எதிராக கொண்டு வந்த உரிமை மீறல் தாக்கீதை மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக, அதுபற்றி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதாக பிரதமர் கடந்த ஜூலை 22ஆம் தேதி உறுதியளித்ததாகவும், ஆனால் அந்த வாக்குறுதியை அவர் மீறி விட்டதால், அவருக்கு எதிராக உரிமை மீறலைக் கொண்டு வர அனுமதிக்குமாறும் இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் தாக்கீதை வைத்தனர்.
அவையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியது உரிமை மீறியதாகவோ அல்லது அவையை அவமதித்ததாகவோ கருத முடியாது. எனவே பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டுவர முடியாது என்று கூறி சோம்நாத் சாட்டர்ஜி அதனை தள்ளுபடி செய்தார்.
இடதுசாரிக் கட்சிகளின் தாக்கீதில் கூறியிருக்கும் கருத்துகளில் தமக்கு திருப்தியில்லை எனவே இதனை தாம் தள்ளுபடி செய்வதாகவும் சோம்நாத் அறிவித்தார்.
பிரதமருக்கு எதிரான தாக்கீது, திரித்துக் கூறப்பட்டிருப்பதாகவும், உரிமை மீறல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் குறிப்பிட்ட அவைத் தலைவர், மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ள பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் கொண்டுவர வேண்டுமானால், மாநிலங்களவைத் தலைவரின் பரிந்துரை அவசியம் என்றார்.