விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருப்பதாக தமிழக அரசைக் கலைக்கக் கோரியும், முதலமைச்சர் கருணாநிதியை கைது செய்ய கோரியும் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவை இன்று காலை கூடியதும், விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதியின் மறைமுகமாக ஆதரவு பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.
இருப்பினும் அவைத்தலைவர் ஹமீது அன்சாரி இதற்கு அனுமதியளிக்காமல், கேள்வி நேரம் தொடங்க அனுமதித்தார்.
இதைத்தொடர்ந்து, அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியபடி, தமிழக அரசை கலைக்க வேண்டும், முதலமைச்சர் கருணாநிதியை கைது செய்யவேண்டும் என்று கோரி அமளியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்களும் பதிலுக்கு கோஷங்கள் எழுப்பினர். இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவையில் கடும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
இது கேள்வி நேரம் என்பதால் உறுப்பினர்கள் தங்கள் இருக்கையில் அமரும்படியும், அவை நடவடிக்கைகளை தொடர அனுமதிக்க வேண்டும் என்று கூறி அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேச அன்சாரி அனுமதி மறுத்தார்.
அவைத்தலைவர் தங்களது கோரிக்கைக்கு அனுமதி அளிக்காததையடுத்து அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.