ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ மற்றும் வெடிவிபத்தில் இடிந்து விழுந்த வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கிய மேலும் 5 பேரின் உடல்கள் இன்று காலை மீட்கப்பட்டது. இதையடுத்து இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
டீக் என்ற இடத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்ததையடுத்து அங்கிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. இதில் தொழிற்சாலையின் அருகில் இருந்து 6 வீடுகள் இடிந்து விழுந்ததுடன் 18 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, உரிய அனுமதியின்றி பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்த 10 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.