Publish Date: Wed, 22 Oct 2008 (16:22 IST)
Updated Date: Wed, 22 Oct 2008 (16:21 IST)
தானே : மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டதையடுத்து அப்பகுதியில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இன்று காலை 11 மணிமுதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை புறநகர் பகுதயில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) ரயில்வேத் துறை தேர்வு நடந்த மையங்களில் புகுந்த மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தொண்டர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்த வட இந்தியர்களை அடித்து விரட்டினர். இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, வட இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்த நவ நிர்மாண் சேனா தொண்டர்களைத் தூண்டியதான வழக்கில் அந்த அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே-வை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராஜ் தாக்கரே கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை விடுவிக்க வலியுறுத்தியும் மராட்டிய மாநிலத்தின் பல இடங்களிலும் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தொண்டர்கள் வன்முறை-கலவரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். வன்முறையாளர்களைக், கலைக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டு தடியடி நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் வைத்துள்ளனர்.
இதனிடையே கல்யாண் பகுதியில் நிகழ்ந்த கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று பாந்த்ரா நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்ட ராஜ் தாக்கரே-வை இதேபோன்றதொரு மற்றொரு வழக்கில் காவல்துறையினர் இன்று மீண்டும் கைது செய்து கல்யாண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.