நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தயாரித்த சந்திராயன்-1 ஆளில்லா விண்கலம் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை திட்டமிட்ட நேரத்தில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சத்தீஸ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து சந்திராயன்-1 விண்கலத்தை தாங்கிய பி.எஸ்.எல்.வி. சி-11 என்ற துருவ செயற்கைக்கோள் செலுத்த வாகனம் இன்று காலை சரியாக 06.22 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
தீ ஜுவாலைகள் வெளியேற சந்திராயனை சுமந்து கொண்டு விண்ணை நோக்கிப் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட் திட்டமிட்டபடி 4 கட்டங்களாகப் பிரிந்து திட்டமிட்டப் பாதையில் துல்லியமாக பறந்து சென்றது. இதில் 4வது மற்றும் இறுதிக் கட்டம் பிரிந்ததும் சந்திராயன்-1 விண்கலம் தனது புவிப் பாதையை வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ராக்கெட் ஏவப்பட்ட 1,100 வினாடிகளில் சந்திராயன்-1 திட்டமிட்ட புவிப் பாதையை அடைந்தது. இது உறுதி செய்யப்பட்டவுடன் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
இதன் பின்னர் பேசிய மாதவன் நாயர், இன்றைய தினம் இந்திய விண்வெளி வரலாற்றில் மிகச் சிறப்புமிக்க தினம் என்றும், இன்று துவங்கிய இப்பயணம் விண்வெளி பயணத்தில் மிக முக்கியமான முயற்சி என்றார்.
கடந்த 4 நாட்களாக தொடர் மழையால் பாதிக்கப்பட்டாலும், சந்திராயன்-1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவ பாடுபட்ட அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்பொழுது புவி வட்டச் சுழற்சிப் பாதையில் 250 கி.மீ. தூர குறுகிய தூரமும் (அபோஜி), 23,000 கி.மீ. நெடிய தூரமும் கொண்ட நீள்வட்டப் பாதையில் சுற்றிவரும் சந்திராயன்-1 விண்கலம், கொஞ்சம் கொஞ்சமாக நிலவை நோக்கி நகர்த்தப்படும். சந்திராயனில் உள்ள பூஸ்டர் என்று உந்து இயந்திரத்தைப் பயன்படுத்தி அதனை பூமியில் இருந்து சற்றேறக்குறைய 3,86,000 கி.மீ. தூரம் நகர்த்தி நிலவில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் நிலைநிறுத்தப்படும். அந்த சுழற்சிப்பாதையில் சந்திராயன் சுற்றத்துவங்கியவுடன், அதிலுள்ள அதி நவீன கருவிகள் நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யத் துவங்கும்.
இதனை பெங்களூருவிற்கு அருகே உள்ள பைலாலு என்ற இடத்தில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து சந்திராயன்-1 விண்கலம் நிலவுக்கு அருகே கொண்டு செல்லப்பட்டு அதன் புவிவட்டப் பாதையில் நிறுத்தப்படும். இதற்கு 15 நாட்கள் பிடிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திராயன்-1 விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியதன் மூலம், நிலவுக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பிய 6வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.