மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜன்சக்தி கட்சியுடன், சமாஜ்வாடி ஒருபோதும் கூட்டணி வைத்துக் கொள்ளாது என சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் தெரிவித்துள்ளார்.
போபாலில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், சமாஜ்வாடி கட்சிக்கும், உமாபாரதியின் பாரதிய ஜன்சக்தி கட்சிக்கும் கொள்கை ரீதியான பல வேறுபாடுகள் உள்ளது என்றும், உமாபாரதி வடதுருவம் என்றால் நாங்கள் (சமாஜ்வாடி) தென்துருவம் என்றும் விவரித்தார்.
கடந்த 2003 டிசம்பரில் நடந்த மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் உமாபாரதியை பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. அதன் பின்னர் அவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாக அமர்சிங் தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தில் உமாபாரதி 3வது அரசியல் சக்தியாக உருவெடுப்பாரா என்ற கேள்விக்கு, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகள் மட்டுமே பிரதானமாக உள்ள மத்திய பிரதேசத்தில் உமாபாரதி நிச்சயம் அரசியல் சக்தியாக உருவெடுப்பார் என்று அமர்சிங் பதிலளித்தார்.
மேலும், நவம்பர் 25ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில், உமாபாரதியின் போட்டி காரணமாக பா.ஜ.க.வினரின் வாக்கு வங்கி சரியும் என்றும் அமர்சிங் கூறியுள்ளார்.