மராட்டிய மாநிலத்தில் மற்ற மாநிலத்தவர்களுக்கு இடமில்லை என்று கூறி தாக்குதல் நடத்திவரும் மஹாராஷ்ட்ர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரே கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் மும்பையில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜ் தாக்ரே கைது செய்யப்பட்டதை அறிந்ததும் வன்முறையில் ஈடுபட்ட சேனா கட்சித் தொண்டர்கள், மும்பை செண்ட்ரல், பரேல், போரிவெலி ஆகிய இடங்களில் வாடகைக் கார்களையும், தானிகளையும் அடுத்து நாசப்படுத்தினர்.
மும்பை கோவா நெடுஞ்சாலையிலும் , மும்பை கிழக்குப் பகுதியான முலண்ட் என்ற இடத்திலும் வன்முறை நடந்துள்ளதென செய்திகள் கூறுகின்றன. ராஜ் தாக்ரே கொண்டுவரப்படவுள்ள பந்தரா நீதிமன்றத்திற்கு பலத்த காவல் போடப்பட்டுள்ளது.
அண்டை மாநிலத்தவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ராஜ் தாக்ரே மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தாக்குதல், அரசு பணியாளர்களை பணி ஆற்ற விடாமல் தடுத்தது, வன்முறையை தூண்டும் வகையில் பேசியது ஆகியவற்றிற்காக ராஜ் தாக்ரே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர் உட்பட 6 பேர் கைது!
இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரயில்வே வேலை வாய்ப்பு தேர்விற்கு வந்த அயல் மாநிலத்தவர்களை தாக்கிய குற்றத்திற்காக சிவ் சேனா கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் பாலா நந்துகோவன்கர் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நந்துகோவன்கர் ராஜ் தாக்ரேயிற்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.