Publish Date: Mon, 20 Oct 2008 (22:34 IST)
Updated Date: Mon, 20 Oct 2008 (22:33 IST)
உத்தரப் பிரதேசத்தின் சோன்டா கிராமத்தில் பொது நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட மேடை சரிந்ததில் ஒருவர் உயிரிழந்தார். எனினும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற லோக்-தள் கட்சியின் தலைவர் சௌத்ரி அஜீத் சிங் உயிர் தப்பினார்.
அம்மாநிலத்தின் காஷியாபாத் அருகே உள்ள சோன்டா கிராமத்தில் லோக்-தள் கட்சியின் சார்பில் இன்று நடந்த விவசாயிகள் பேரணியில் அஜீத் சிங் பங்கேற்றார். அவர் மேடைக்கு வந்ததும் அவருக்கு மாலை அணிவிப்பதற்காக ஏராளமான விவசாயிகள் காவல்துறையினரின் தடையையும் மீறி மேடையில் ஏறினர்.
இதன் காரணமாக பாரம் தாங்காமல் மேடை சரிந்தது. இதில் பதோலா பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் நரேந்திர சிங் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
எனினும், அஜீத் சிங் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
காயமடைந்த 3 பேருக்கும் உள்ளூர் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. மேலும் அவர்கள் அனைவரது உடல்நிலையிலும் முன்னேற்றம் காணப்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Webdunia
Publish Date: Mon, 20 Oct 2008 (22:34 IST)
Updated Date: Mon, 20 Oct 2008 (22:33 IST)