சட்டீஸ்கார் மாநிலத்தில் நக்ஸலைட்டுகள் நடத்திய கண்ணி வெடி மற்றும் துப்பாக்கிச் சண்டையில் மத்திய கூடுதல் காவற்படையைச் (CRPF) சேர்ந்த 12 காவலர்கள் கொல்லப்பட்டனர், மேலும் 10 பேர் காயமுற்றனர்.
அம்மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்திலுள்ள கொக்கம்பள்ளி என்று கிராமத்திற்கு அருகே இத்தாக்குதல் நடந்துள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டீஸ்கார் மாநிலத்தில் தேர்தலைப் புறக்கணிக்குமாறு பிரச்சாரம் செய்துவரும் மாவோயிஸ்டுகளைத் தேடி கால் நடையாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது இந்தக் கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக மத்திய கூடுதல் காவற்படையின் துணைத் தலைமை ஆய்வாளர் ஆர்.எஸ். சோட்டா தெரிவித்துள்ளனர்.
கண்ணி வெடித் தாக்குதலில் 3 காவலர்கள்தான் கொல்லப்பட்டனர் என்றும், இத்தாக்குதல் நடந்த அடுத்த கணமே மறைந்திருந்த நக்ஸ்லைட்டுகள் துப்பாக்கியால் சுட்டதில் மற்றவர்கள் பலியானதாகவும் சோட்டா கூறினார். காயமுற்றவர்களில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதெனவும் அவர் தெரவித்துள்ளார்.
கடந்த மாதம் பக்சார் மாவட்டத்தில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் மத்திய கூடுதல் காவற்படையைச் சேர்ந்த 5 காவலர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.