பொதுத்துறை வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும் மக்கள் சேமிப்பாக வைத்திருக்கும் வைப்புத் தொகை (டெபாசிட்) முற்றிலும் பாதுகாப்பாக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.
என்றாலும் நாட்டின் பொருளாதாரத்தில் தற்காலிகமாக ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியை ஏற்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்று மக்களவையில் பேசிய பிரதமர் தெரிவித்தார்.
மக்களவையில் இன்று நண்பகலுக்குப் பிறகு தன்னிலை விளக்க அறிக்கையொன்றை பிரதமர் மன்மோகன் சிங் வாசித்தார்.
நம் நாட்டு வங்கிகள் (பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள்) நிதியடைப்படையில் வலுவாக இருப்பதாகவும், முதலீடுகள் நன்றாக உள்ளதாகவும் கூறிய அவர், அவை அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்றார்.
எந்தவொரு வங்கியும் பாதிப்புக்குள்ளாகும் என்ற அச்சம் தேவையில்லை என்று பிரதமர் உறுதி கூறினார்.
நம் நாட்டு வங்கிகளில் முதலீடு செய்திருப்போருக்கு அவர்களின் வைப்புத் தொகை முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது என்பதைத் தெரிவிக்க தாம் விரும்புவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி மற்றும் உலக அளவில் பொருளாதார பாதிப்புகளால் இந்திய வங்கிகள் பாதிக்கப்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக் ஏற்பட்டிருக்கும் ஸ்திரமற்ற நிலைக்கு எதிராக பிரதமர் இந்த உறுதியை அளித்திருக்கிறார்.
பங்குச் சந்தைகளில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியானது, பொருளாதார நடவடிக்கைகளில் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், நிலையான தொழிற்சாலை உற்பத்தி மூலம் முன்னேற்றம் ஏற்படும் என்றும் மன்மோகன் சிங் கூறினார்.
துவக்கத்தில் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகளை ஏற்றுக் கொள்வதில் சிரமம் இருக்கக்கூடும் என்றும், உலக அளவில் பொருளாதாரம் நிலையற்ற தன்மை நீடிப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
வளர்ந்த நாடுகளில் உருவாகியுள்ள பொருளாதார வீழ்ச்சி மற்றும் நிதிப் பற்றாக்குறை இந்திய பொருளாதாரத்தில் மறைமுக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.