நடப்பாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் சரக்குப் போக்குவரத்து மூலமாக ரயில்வே துறைக்கு கிடைத்துள்ள வருவாய் 18.91 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் சரக்கு போக்குவரத்து மூலமாக ரூ.25,502.95 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டின் இதே 6 மாதங்களில் கிடைத்த வருவாய் ரூ.21,447.48 கோடியைவிட இது 18.91 விழுக்காடு அதிகமாகும்.
கடந்த ஆண்டில் 37.03 கோடி டன் சரக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது இந்த ஆண்டில் 8.55 விழுக்காடு அதிகரித்து 40.1 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் சரக்குகள் மற்றும் தொலைவை குறிப்பிடும் என்.டி.கே.எம் புள்ளி 2,37,564 கோடி என்ற அளவில் இருந்து இந்த ஆண்டில் 2,60,367 கோடியாக உயர்ந்துள்ளது. இது 9.6 விழுக்காடு வளர்ச்சியாகும்.
இந்த ஆண்டு செப்டம்பரில் 2.86 கோடி டன் நிலக்கரி மூலமாக ரூ.1,454.90 கோடியும், 1.02 கோடி டன் இரும்பு தாது மூலமாக ரூ.656.09 கோடியும், 65 லட்சம் டன் சிமென்ட் மூலமாக ரூ.328.67 கோடியும், 40.7 லட்சம் டன் உரம் மூலமாக ரூ.258.35 கோடியும், 28.1 லட்சம் டன் உணவு தானியங்கள் மூலமாக ரூ.273.87 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.
மேலும், 31.1 லட்சம் டன் பெட்ரோலிய எண்ணெய், உயவு எண்ணெய் மூலமாக ரூ.245.51 கோடியும், 22.1 லட்சம் டன் எஃகு உள்ளிட்ட பொருட்கள் மூலமாக ரூ.223.85 கோடியும், எஃகு தொழிற்சாலைகளுக்கான மற்ற மூலப் பொருட்கள் 9.4 லட்சம் டன் மூலமாக ரூ.63.85 கோடியும், 24.9 லட்சம் டன் சரக்கு பெட்டக சேவை மூலமாக ரூ.208.85 கோடியும், மற்ற பொருட்கள் 49.5 லட்சம் டன் மூலமாக ரூ.289.34 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.