ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கோவா கல்வி அமைச்சரின் மகன் ரோஹித் மான்செரட்டிற்கு எதிராக அப்பெண் காவல்துறையினரிடம் புகார் அளிக்க உள்ளார்.
முறைப்படியான புகார் இதுவரை கொடுக்கப்படாததால், காவல்துறையினரால் ரோஹித்தை கைதுசெய்ய முடியாமல் இருந்தது. தற்போது ஜெர்மன் பெண்ணின் வழக்கறிஞர் கூறுகையில், தமது கட்சிக்காரர் சார்பில் அமைச்சரின் மகனுக்கு எதிராக முறைப்படியான புகார் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே பாலியல் பலாத்காரம் செய்ததை உறுதிப்படுத்துவதற்காக ஜெர்மன் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
ஜெர்மன் பெண்ணின் வாக்குமூலம் அல்லது மருத்துவப் பரிசோதனைக்காக தாங்கள் காத்திருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கோ ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமைச்சரின் மகனுக்கு எதிரான குற்றச்சாட்டு அரசியல்ரீதியாக புனையப்படுவதாக கோவா முதல் அமைச்சர் திகம்பர் காமத், உள்துறை அமைச்சர் ரவி நாயக் ஆகியோர் கூறினர். காவல்துறையினருக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டிருப்பதாகவும், இப்பிரச்சினை குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.