மாரடைப்பு காரணமாக டெல்லி அகில இந்திய விஞ்ஞான கழக மருத்துவமனையில் (எய்ம்ஸ்) சிகிச்சைப் பெற்று வந்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஷ்முன்ஷி நரம்பியல் மேல் சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தாஷ்முன்ஷியின் நரம்பியல் சம்பந்தமான மேல் சிகிச்சைக்காக அவரை அப்போலோ மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்ற மருத்துவர்களின் ஆலோசனை படி இன்று காலை 10.30 மணியளவில் அவர் அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அவரது நிலைமை சீராக உள்ளதாகவும், நரம்பியல் தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவர் டி.கே. ஷர்மா தெரிவித்தார்.
கடந்த 8 நாட்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தாஷ்முன்ஷியின் உடல்நிலை சீராக இருந்தாலும், அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தாஷ்முன்ஷியை பரிசோதிக்க அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டென் ஹென்லே டெல்லி வரவழைக்கப்பட்டுள்ளார். அவர் தாஷ்முன்ஷிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருதய பாதிப்பு மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக கடந்த அக்டோபர் 13ஆம் தேதி டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் தாஷ்முன்ஷி சேர்க்கப்பட்டார்.