இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை அந்நாட்டு இராணுவம் உடனே நிறுத்தா விட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்நாட்டு அரசுக்கு தமிழ்த் திரையுலகினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, தமிழ்த் திரையுலகத்தினர் நேற்று ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பேரணியைத் தொடர்ந்து திரையுலகினர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் இந்த எச்சரிக்கை விடப்பட்டது.
கார்த்திக், வடிவேலு, ரமேஷ் கண்ணா, பாண்டியராஜன், இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன்,விஜய டி.ராஜேந்தர், பாக்யராஜ், சேரன், சீமான், தயாரிப்பாளர் ராம. நாராயணன், தேனப்பன், உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, சீமான் உட்பட பலரும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
கவிஞர் வைரமுத்து:
வானில் 3 லட்சத்து 44 ஆயிரத்து 400 கி.மீ.க்கு அப்பால் உள்ள நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் மத்திய அரசுக்கு 16 கி.மீ.தொலைவில் உள்ள இலங்கையில் நடக்கும் பிரச்னைக்கு தீர்வு காணமுடியாதது ஏன்? தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அப்பாவி தமிழர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சே, இத்துடன் தனது கொட்டத்தை அடக்கிக் கொள்ள வேண்டும்.
இலங்கைக்கு கொடுக்கப்பட்ட ஆயுதங்களை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். ஐ.நா. தனது கிளையை இலங்கையில் திறந்து தமிழர்களின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அதற்கான முயற்சிகளை முதல்வர் கருணாநிதி மேற்கொள்ள வேண்டும்.
இயக்குனர் அமீர்:
கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் வெடிகுண்டு சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதற்கு சூத்ரதாரியாக இருப்பது மத்திய அரசுதான் என்பது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தியனை வைத்து தமிழர்களின் கண்களை குத்துகின்றனர்.
நடிகர்கள் பார்த்திபன், வடிவேலு, சேரன், இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, விஜய டி.ராஜேந்தர், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன் உள்ளிட்ட பலரும் பேசினர்.