புதுடெல்லி: டெல்லியில் கட்டப்பட்டு வந்த டெல்லி மெட்ரோ ரயில் பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியானார்கள். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர்.
டெல்லியில் இந்திரப் பிரஸ்தாவையும், நொய்டாவையும் இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக கிழக்கு டெல்லியில் ஷாகர்பூர் என்ற இடத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது
இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் பாலத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்ததில் பாலத்தின் அடியில் சென்று கொண்டிருந்த பேருந்து, வாகனங்கள் நசுங்கியது.
இதில் பேருந்தின் முன் பகுதி நசுங்கியதில் பேருந்தின் ஒட்டுனர், பயணிகள் உள்பட 2 பேர் நிகழவிடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினரும், மீட்பு குழுவினரும் இடி பாடுகளுக்குள் சிக்கிய 25 பேர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பாலம் இடிந்து விழுந்ததால் அப்பகுதி வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. மேலும் மீட்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
பாலம் இடிந்து விழுந்ததையறிந்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டதோடு இந்த சம்பவம் தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு உத்தர விட்டார்.